தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பொன்மலைப்பட்டி:
தூக்கில் தொங்கினார்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் வில்லியம் ஹென்றி (வயது 30). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அக்கவுண்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை ஆரோக்கியராஜ், தாய் மெர்சி ராணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வராண்டா பகுதியில் வில்லியம் ஹென்றி சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உருக்கமான கடிதம்
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன், வில்லியம் ஹென்றியை கீழே இறக்கி பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வில்லியம் ஹென்றியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வில்லியம் ெஹன்றி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, அதற்கான தவணை தொகையை சரியாக கட்டி வந்துள்ளேன். கடந்த மாத தவணையை கட்ட தவறி விட்டேன். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அதனை கட்டி விடுகிறேன் என்று கூறினேன்.
பதில் கூற வேண்டும்
ஆனால் அந்த நிறுவனத்தின் கலெக்ஷன் ஏஜெண்டு, என் வீட்டின் முன்பு நின்று மிகவும் மோசமாக பேசி, என்னை மன உளைச்சலுக்கு தள்ளினார். என்னுடைய இந்த முடிவுக்கு முழுமையான காரணம் அந்த நிறுவனத்தின் கடன் வசூல் செய்யும் ஊழியர்தான். எனக்கும், எனது குடும்பத்திற்கும் சரியான பதிலை அவர் கூறியாக வேண்டும், என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.