தனியார் வங்கி ஊழியர் கொலை வழக்கில்தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
தனியார் வங்கி ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கீரனூர் அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒடுகம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பள்ளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதில் ஒடுகம்பட்டியை சேர்ந்த முகமதுயாசின் (வயது 21) என்பவர் காயமடைந்தார். இதையடுத்து அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடைேய அவரை பார்க்க சென்ற ஒடுகம்பட்டியை சேர்ந்த ஸ்ரீரங்கம் ஆக்சிஸ் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த விக்னேஸ்வரன் (27) என்பவர் முகமதுயாசினை தாக்கியவர்களை பார்த்து உங்களை சும்மா விடமாட்டேன் என்று பேசி விட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து விக்னேஸ்வரனும், ஒடுகம்பட்டியை சேர்ந்த வீரமணி (25), அரியராஜ் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். சேமத்துப்பட்டி பிரிவு சாலையில் வந்த போது, அவர்களை வழி மறித்த பள்ளத்துபட்டியை சேர்ந்த சிலர் வீரமணியையும், அரியராஜையும் தாக்கிவிட்டு விக்னேஸ்வரனை கம்பியால் முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தினர். பின்னர் படுகாயமடைந்த விக்னேஸ்வரனை, கம்பியால் குத்தியவர்களே மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார் பள்ளத்துப்பட்டியை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதில் போலீசார் சிலரை கைது செய்த நிலையில், பள்ளத்துபட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.