பிரதமர் நரேந்திர மோடி 28-ந் தேதி சென்னை வருகை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Update: 2022-07-13 23:54 GMT

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஸ் திருவிழாவில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகளைக் கொண்ட பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பூஞ்சேரியில் போர்பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் 22 சதுர அடி அளவிலான அரங்கத்தை விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

தீபத்தின் தொடர் ஓட்டம்

அதுதவிர வாகனங்கள் நிறுத்தும் இடம், சாலை வசதிகள், மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் பூஞ்சேரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அவர் கேட்டறிந்தார்.

இந்த போட்டியையொட்டி கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த தீபம் 40 நாட்களில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக போட்டி நடக்கும் மாமல்லபுரம் வந்தடைகிறது.

மோடி தொடங்கி வைக்கிறார்

செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துகாட்டும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் 29-ந் தேதி மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று செஸ் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது மற்றும் பல உயர் அதிகாரிகள் இணைந்து மும்முரமாக மேற்கொள்கின்றனர்.

முன்னிலை வீரர்கள்

இந்த போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அமெரிக்காவின் பாபியானோ காருனா ஆகியோர் களம் இறங்க இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதுபோல் இந்திய தரப்பில் பங்கேற்கும் 3 அணிகளில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகா உள்பட 25 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்