"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடிக்கு வெற்றியை பரிசாக வழங்க வேண்டும்"- அண்ணாமலை பேச்சு
“நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடிக்கு வெற்றியை பரிசாக வழங்க வேண்டும்” என்று முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
"நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடிக்கு வெற்றியை பரிசாக வழங்க வேண்டும்" என்று முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
பாதயாத்திரை
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கினார்.
நேற்று மாலையில் நெல்லை டவுன் அருகே உள்ள பாறையடி கிராமத்தில் இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திர யாதவ், அகில இந்திய கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தனர். இந்த பாதயாத்திரை தொண்டர் சன்னதி, வடக்கு மவுண்டு ரோடு, ஆர்ச், சொக்கப்பனை முக்கு, பாரதியார் தெரு வழியாக வாகையடி முக்கை வந்தடைந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
மோடியின் சிறப்பான ஆட்சி
நெல்லை உள்பட 41 தொகுதிகளில் 184 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். 9-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு கூட்டம் நடத்தியும், பல லட்சம் மக்களை சந்தித்தும் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதையெல்லாம் இந்த பாதயாத்திரையின் மூலம் பார்த்து வருகிறேன். அவரது 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் மாற்றத்தை கண்டுள்ளது. மோடி, டெல்லியில் இருந்து தமிழர்களை பற்றி சிந்திக்கிறார்.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் வீட்டின் கதவை தட்டி வழங்கப்படுகிறது. வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகிறது. குடும்ப ஆட்சியை மட்டுமே கண்டு வரும் நிலையில் மக்களுக்கு ஜனநாயக ஆட்சியை காண்பித்து உள்ளார்.
தமிழகத்தில் மாற்றம்
தமிழகத்தில் மாற்றம் வந்து விட்டது. அதை உறுதிப்படுத்த ஒரு தேர்தல் வரவேண்டும். அப்போது தெரியும், தமிழ்நாட்டில் ஏற்கனவே மாற்றம் வந்து விட்டது என்று. தமிழகத்திலும் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை பார்க்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இந்த பாதயாத்திரை உருவாக்கி உள்ளது.
நெல்லை மாநகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம், நேருஜி கலையரங்கம், வர்த்தக மையம் உள்பட ரூ.965 கோடியில் 89 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஸ்மார்ட் சிட்டிக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு 'வந்தே பாரத்' ரெயில் விரைவில் வர இருக்கிறது.
புரட்சியை ஏற்படுத்தியவர் மோடி
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய அரசு ரூ.100 கொடுத்தால் அது கடைக்கோடி மனிதனுக்கு ரூ.15 மட்டுமே சென்றடைகிறது என்று கூறினார். ஆனால் பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு மத்திய அரசு கொடுக்கும் பணம் நேரடியாக மக்களுக்கு சென்றடைகிறது. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு மானியம் ரூ.200, 100 நாள் வேலை திட்ட சம்பளம் அனைத்தும் வங்கி கணக்கு மூலம் வழங்கப்படுகிறது. முடியாது என்று கூறியதை முடியும் என்று செய்து காட்டி புரட்சியை ஏற்படுத்தியவர் மோடி.
40 தொகுதிகளில் வெற்றி
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார். தமிழையும், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் உள்ள கருத்துகளையும் உலகம் முழுவதும் எடுத்து செல்கிறார். இது தமிழ்நாட்டுக்கு பெருமை அல்லவா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவது நிச்சயம். அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி. வரவேண்டும்.
அதிக எம்.பி.க்களை வழங்கி உத்தரபிரதேச மாநிலத்துக்கு வழங்கிய நிதியை விட, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அதிக நிதியை வழங்கி உள்ளார். தமிழர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ள மோடிக்கு 40 தொகுகளிலும் வெற்றியை பரிசாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா கொடி பறக்கும்
முன்னதாக மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் பேசுகையில், "இந்த பாதயாத்திரை தமிழகத்தின் விதையை அண்ணாமலை தலைமையில் மாற்றி அமைக்க போகிறது. 8 கோடி தமிழர்கள் மனதில் மிகப்பெரிய எழுச்சியை அண்ணாமலை ஏற்படுத்தி உள்ளார். தமிழகத்தில் தற்போது மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து வருகிறது. அதை இந்த யாத்திரை மூலம் மாற்றி அமைக்க வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் 2 கட்சிகளும் குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி செய்வார்கள். இவர்களது ஊழலும், குடும்ப ஆட்சியும் ஒழிய வேண்டும்.
மோடி எப்போதும் தமிழ்நாட்டை பற்றியே சிந்திக்கிறார். தமிழ்நாடு உயர்ந்தால் இந்தியா உயரும் என்று கூறி வருகிறார். தமிழ்நாட்டுக்கு பெரிய திட்டங்களை மத்திய அரசு தந்து கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் விரைவில் பா.ஜனதா கொடி பறக்கும்'' என்றார்.
நிறைவு
இந்த கூட்டத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, கருப்பு முருகானந்தம், நெல்லை மாவட்ட பொறுப்பாளர் நீலமுரளி யாதவ், முன்னாள் மேயர் புவனேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்றுடன் அண்ணாமலையின் முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு பெற்றுள்ளது. 2-வது கட்டமாக வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.