சுகாதாரமான முறையில் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும்

விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சத்தான, சுகாதாரமான முறையில் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

Update: 2022-11-17 17:52 GMT

விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சத்தான, சுகாதாரமான முறையில் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளில் உள்ள மாணவர்கள் விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 13 விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 விடுதிகள், வனத்துறையின் சார்பில் 5 விடுதிகள், பழங்குடியினர் நலத்துறை 8 விடுதிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்கள் விடுதிகளுக்கு தேவையான குடிநீர், கட்டட, கழிப்பிட வசதி, சலையலறைகள் மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஆகிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் பேசியதாவது:-

சுகாதாரமான முறையில் உணவுகள்

மாணவர்களுக்கு விடுதிகளில் வழங்கப்படுகின்ற உணவுகள் சத்தான உணவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்கப்பட வேண்டும். மேலும் இதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். வழங்கப்படாத மாணவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உதவித்தொகை வழங்க வேண்டும்.

நடைபெற்று வருகிற பள்ளி புனரமைப்பு பணி, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பிட வசதி, சலையலறைகள் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் ஆகிய கட்டுமான பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த தகவல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் விடுதிகளில் சைல்டு ஹெல்ப் லைன் எண், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண், காவல் கட்டுப்பாட்டு அறை எண், சம்பந்தப்பட்ட துறை அலுவலர், தாசில்தார் தொலைப்பேசி எண் ஆகிய எண்களை அறிவிப்பு பலகைகள் அமைத்து அதில் மேற்கண்ட தொலைப்பேசி எண்கள் பதிவு செய்து பராமரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், வனச்சர அலுவலர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்