மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பு
பழைய கட்டடங்களை ஜே.சி.பி. வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணியில் தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.;
தஞ்சாவூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் சூழலில், நேற்றைய தினம் தஞ்சை கீழராஜவீதியில் பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் உள்ள பழமையான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு கண்டறியப்பட்ட பழமையான கட்டடங்களை இடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை மூல அனுமார் கோவில் பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் பழமையான கட்டடங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால், அவை இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.