கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போக்குவரத்துத் துறை செயலாளர் சுற்றறிக்கை
கனமழையின் போது அரசு அறிவிக்கும் முன்னறிவிப்புக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கண்ட நாள்களில் 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, போக்குவரத்துத் துறை செயலாளர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "மழை காலத்தில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான அளவு பேருந்துகளை இயக்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மழையின் போது பேருந்துகளை மிகவும் கவனமாக இடைவெளி விட்டு இயக்க வேண்டும். சாலையில் மரங்கள், மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதா என்பதை கவனித்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
கனமழையின் போது அரசு அறிவிக்கும் முன்னறிவிப்பு மற்றும் நிலைமைக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். கடலோர பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.