நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணியின்போது விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து உள்ளது.;

Update:2023-08-31 03:13 IST

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

நிலவில் கந்தகம் உள்ளிட்டவை இருப்பதை நேற்று முன்தினம் கண்டறிந்து அனுப்பியது. இதற்கிடையே நேற்று விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.

இந்த புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. பிரக்யான் ரோவரில் உள்ள வழிசெலுத்தல் கேமராவின் (நேவிகேஷன் கேமரா) உதவியுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், 'கொஞ்சம் சிரியுங்கள் ('ஸ்மைல், பிளீஸ்') என்ற தலைப்புடன் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பூமியில் 14 நாட்களுக்கு சமமான ஒரு நிலவு நாளில் ரோவர் தற்போது வரை அதனுடைய பாதி வாழ்க்கையை (அதாவது 7 நாட்களை) எட்டி உள்ளது. இந்த நேரத்தில் நிலவின் வெப்பம், கனிமங்கள் பகுப்பாய்வு செய்து கந்தகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று பள்ளங்கள் இருப்பதை கண்டுபிடித்தது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.

அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், கந்தகம் மற்றும் ஆக்சிஜன் போன்ற பிற கனிமங்கள் இருப்பதையும் பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் இருப்பது குறித்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளியே இல்லாத நிலையில் வெப்பநிலை மைனஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதால், லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட் காலம் ஒரு நிலவு நாளுக்கு பிறகு செயல்பட வாய்ப்பில்லை.

ரோவரில் உள்ள லேசர் தூண்டப்பட்ட 'பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி' (எல்.ஐ.பி.எஸ்.) உறுப்புகள் எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை கண்டறிய முடியும்.

14 நாட்களின் காலக்கெடுவைக் கொடுத்து கனிம கலவையை விரைவாக ஆய்வு செய்ய உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்