சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தை மாத பிரதோஷ விழா நேற்று நடந்தது.

Update: 2023-01-19 18:54 GMT

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தை மாத பிரதோஷ விழா நேற்று நடந்தது.

பிரதோஷ விழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கருவறையில் சத்யகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் சத்திய கீரிஸ்வரரின் (சிவபெருமானின்) வாகனமான பெரியநந்தி அமைந்து உள்ளது. ஆகவே இங்கு மாதத்தில் 2 முறை பிரதோஷ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வழியில் நேற்று பிரதோஷத்தையொட்டி கருவறையில் சத்தியகீரிஸ்வரருக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜையும், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து தங்க ரிஷிப வாகனத்தில் சத்திய கீரிஸ்வரர், கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி கம்பத்துடி மண்டலத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரதோஷத்தையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில், சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில், மலை உச்சியில் உள்ளகாசி விஸ்வநாதர் கோவில், இந்துசமய அறநிலைதுறைக்கு உட்பட்ட திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காசிவிசுவநாதர் சன்னதியில் பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள சிவன் -பார்வதி சன்னதியில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இங்கும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதை போல காஞ்சரம்பேட்டை, பாறைபட்டி சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடந்தது.

பாலமேட்டில் உள்ள பொது மகாலிங்க சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் சுவாமி, அம்பாள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், தெற்கு மாசிவீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுவாமி, அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சோமசுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்