விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-08 11:41 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானிய விலையில் பவர் டில்லர்

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை எந்திர மயமாக்கல் திட்டத்தில் உழவு பணிகளுக்கு பவர் டில்லர் 2-வது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 84, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 40 வழங்கிட அரசிடமிருந்து ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

சிறு, குறு, மகளிர், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர்டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்கு எதிரில், அணைக்கட்டு ரோடு, வாலாஜா என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்து மானியம் பெற்று பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்