விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கூலி உடன்பாட்டை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக நீடித்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.;

Update:2022-07-10 00:33 IST

ராஜபாளையம்,

கூலி உடன்பாட்டை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக நீடித்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

வேலை நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

கடந்த ஒரு ஆண்டில் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட காரணங்களை காட்டி கடந்த 1½ ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கவில்லை என குற்றம் சாட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி உயர்வு குறித்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த 4 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை

எனவே நேற்றுமுன்தினம் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படும் என உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சீனிவாசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முடிவில் 3 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் கூலி உயர்வும், தீபாவளிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் போனசாக வழங்கப்படும் எனவும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

வாபஸ்

வட்டாட்சியர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கையெழுத்திட்ட நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இதனால் 34 நாட்களாக நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்