தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவாரூர் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-24 18:45 GMT

திருவாரூர் ஒன்றியம் உமாமகேஸ்வரபுரம் ஊராட்சி கீழத்துறைக்குடி கன்னித்தெருவில் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பி மக்களிடையே மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இந்த பகுதிக்கு ஏதேனும் கனரக வாகனங்கள் வந்தால் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.தற்போது மழை காலம் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் மின் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து கச்சனம் மின் வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் பழுதடைந்த மின் கம்பத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்