விசைப்படகு-நாட்டுப்படகு மீனவர்கள் மோதல்: மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
விசைப்படகு-நாட்டுப்படகு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட 3 விசைப்படகுகளை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது.;
மீனவர்கள் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய இடங்களில் வலைகளை விரித்து மீன்பிடிப்பதாக புதுக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் இடையே நேற்று முன்தினம் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. பின்னர் 3 விசைப்படகுகளில் சென்ற 12 மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.
இதையறிந்த விசைப்படகு மீனவர்களின் உறவினர்கள் விசைப்படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறைவைக்கப்பட்ட 12 பேரையும் மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சமாதான கூட்டம்
இதையடுத்து நாட்டுப்படகு- விசைப்படகு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் சிவக்குமார், கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு மற்றும் அதிகாரிகள் தலைமையில் இருதரப்பு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாட்டுப்படகு மீனவர்கள் உள்நோக்கி 5 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், விசைப்படகு மீனவர்கள் மேல்நோக்கி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிப்பது எனவும், நாட்டுப்படகு மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 3 விசைப்படகுகளையும் விடுவிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.