பிரேத பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் விஷம்
மேற்பனைக்காடு கிராமத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்த வழக்கில் பிரேத பரிேசாதனையில் பெண்ணின் வயிற்றில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கினர்.
கீரமங்கலம்:
பெண் தற்கொலையில் புதிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி கோகிலா (வயது 36). இவர், கடந்த 1-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கோகிலா தற்கொலை சம்பவத்தில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போலீசார் மற்றும் தி.மு.க. பிரமுகர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் 6 பேர் மீது நடவடிக்கை கோரியிருந்தார்.
2 நாட்களுக்கு பிறகு கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் கோகிலாவின் வயிற்றில் விஷம் இருந்தது தெரியவந்தது. முன்னதாக கீரமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் 2 பெண் போலீசார் பணியிடமாற்றம் செய்தனர். இதைதொடர்ந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் கூறியிருந்தார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் கோகிலா வயிற்றில் விஷம் இருந்ததையடுத்து கோகிலா வீட்டில் காலி விஷ பாட்டில் கிடக்கிறதா என்று போலீசார் தேடினார்கள். தொடர்ந்து நேற்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் கோகிலா வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் அடுத்தகட்டமாக விசாரணை செய்தனர். சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை செய்யப்பட்டது.
பா.ஜ.க. துணை நிற்கும்
இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ஜ.க. இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தனது கட்சி பிரமுகர்களுடன் மேற்பனைக்காட்டில் உள்ள கோகிலா வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும், கோகிலாவின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோகிலா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் உள்ளபடி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்த பட்ச நடவடிக்கையாக போலீசாரை பணியிடை நீக்கம் கூட செய்யாமல் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக பா.ஜ.க. துணை நிற்கும் என்றார்.