ஆள் பற்றாக்குறையால் தபால் சேவை பாதிப்பு
ஆள் பற்றாக்குறையால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் தபால் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. அதேபோல் அங்கு போதிய பணியாட்கள் இல்லை. இதனால் பதிவு தபால் அனுப்புவதற்கும், வைப்புத்தொகை செலுத்துவதற்கும், ஸ்டாம்புகள் கவர் விற்பனை செய்வதற்கும் போதிய பணியாளர்கள் இன்றி பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு பணம் எடுக்க வருபவர்கள் மற்றும் பணம் செலுத்த வருபவர்கள் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள் பணியாட்கள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாகவே பொதுமக்கள் இங்கு வந்து விட்டு திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து தபால் அலுவலர் கூறுகையில், முதுகுளத்தூர் தபால் நிலையத்தில் தபால் பதிவு செய்வதற்கும், பணம் எடுத்தல், கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 6 பணியாளர்கள் நியமித்துள்ளனர். ஆனால் அவர்களை பக்கத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையத்திற்கு பயிற்சிக்காக மேல் அதிகாரிகள் அனுப்பி விடுகின்றனர். தற்போது ஒரு பணியாளர் மட்டுமே கடந்த 4 நாட்களாக பணியாற்றி வருகிறார். அவருக்கும் ஐடி. இல்லாததால் என்னுடைய ஐடியை வைத்துதான் தற்போது பணி செய்து வருகிறார். இதனால் பணிகள் முழுவதும் பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காததாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் திரும்ப செல்கின்றனர். எனவே நிர்வாகம் ஆள் பற்றாக்குறையை நிறைவு செய்திட வேண்டும் என்றார்.