முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Update: 2023-09-28 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு, அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடந்தது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்களால் அபிஷேகமும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்