பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பந்தலூரில் பலத்த மழை காரணமாக பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றை தூர்வாரிய பொக்லைன் எந்திரம் வெள்ளத்தில் சிக்கியது.;
பந்தலூர்
பந்தலூரில் பலத்த மழை காரணமாக பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றை தூர்வாரிய பொக்லைன் எந்திரம் வெள்ளத்தில் சிக்கியது.
பலத்த மழை
பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை, பந்தலூர்-கூடலூர் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
பொக்லைன் எந்திரம்
நேற்று முன்தினம் பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது. இதையடுத்து மற்றொரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கரையோர மண் அகற்றப்பட்டது. பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்திரம் மீட்கப்பட்டது. இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளிலும், பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காமலும் அவதியடைந்தனர். பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.