பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 188 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

Update: 2023-01-09 18:26 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, வேட்டி- சேலை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை திருக்கோகர்ணம் அர்பன் கடை எண் 17-ல் கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மாவட்டத்தில் உள்ள 1,037 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 3 அங்காடிகள் என மொத்தம் 1,040 அங்காடிகளில் உள்ள 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

வேட்டி-சேலை

மேலும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை புதுக்கோட்டை மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி வரை நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் தினசரி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் 4,23,331 நபர்களுக்கு வேட்டிகளும், 4,23,306 நபர்களுக்கு சேலைகளும் வழங்கப்பட உள்ளது. சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பரிசுத்தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதும் பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எவ்வித குறையுமின்றி இத்திட்டத்தினை செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் குறைகள் ஏதேனும் இருப்பின் இலவச தொலைபேசி எண் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நீண்ட வரிசை

பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச்சென்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு சில கடைகளில் சர்வர் பிரச்சினையின் காரணமாக பயோமெட்ரிக் முறை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அதனை தவிர்த்து விட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்கினர். குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்