10¾ லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-நாளை முதல் டோக்கன் வினியோகம்
சேலம் மாவட்டத்தில் 10¾ லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பரிசு
தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000-ம், முழுக்கரும்பு சேர்த்து ெபாங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக மாவட்டத்திற்கு ரூ.118 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு நகர்புறப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
நாளை முதல் டோக்கன்...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மற்றும் நேரம் தொடர்பான டோக்கன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் முதல் 8-ந்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்படும். பின்னர் 9-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே ரேஷன் அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.