கோடிகளை கொட்டியும் புதர்மண்டிக் கிடக்கும் குளங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிகளை கொட்டி சீரமைக்கப் பட்ட குளங்கள் புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும் அங்கு விஷப்பாம்புகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிகளை கொட்டி சீரமைக்கப் பட்ட குளங்கள் புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும் அங்கு விஷப்பாம்புகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
குளங்கள் சீரமைப்பு
கோவையில் இதமான காலநிலை நிலவி வருகிறது. மேலும் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு மாநகர பகுதியிலேயே உக்க டம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், செல்வ சிந்தாமணி, முத்தண்ணன் குளம், குறிச்சிகுளம் உள்பட 8 குளங் கள் உள்ளன. அவற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கும்.
இந்த குளங்களில் அதிகளவில் கழிவுநீர் கலந்ததால் அதிகளவில் துர்நாற்றம் வீசியது. ஆகாயத்தாமரை செடிகளும் ஆக்கிரமித்து வளர்ந்து இருந்தன. எனவே இந்த குளங்களை சீரமைத்து சுற்றுலா மையமாக மாற்ற முடிவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரூ.350 கோடி
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.350 கோடி செலவில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி ஆகிய 7 குளங்களின் கரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தி மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி நடைபெற்றன. அதில் உக்கடம், வாலாங்குளத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளன.
இந்த குளத்தில் படகுசவாரி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக உக்கடம் பெரியகுளத்தில் செல்பி எடுக்கும் வசதி உள்ளது. எனவே அங்கு தினமும் ஏராளமானோர் குவிந்து செல்பி எடுத்து செல்கிறார்கள்.
பாம்புகளின் நடமாட்டம்
இதுபோன்று மற்ற குளங்களிலும் கரையில் நின்று குளத்தை ரசிக்கும் வகையில் மாடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு நின்று குளத்தின் அழகை பலரும் ரசித்து செல்கிறார்கள்.
மேலும் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து குளத்தின் அழகை சுற்றிப்பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.
இது ஒறுபுறம் இருக்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப் பட்ட குளங்கள், போதிய பராமரிப்பு இல்லாமல், புதர்கள் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது.
அதில் அதிகளவில் புதர்மண்டி கிடப்பது செல்வசிந்தாமணி குளம். அதுபோன்று முத்தண்ணன் குளமும் புதர் மண்டி கிடக்கி றது. மேலும் அதிகளவில் பார்த்தீனியம் செடிகள் பார்வை மாடங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இதனால் அங்கு விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
செல்ல முடியாத நிலை
எனவே அந்த 4 இடங்களில் உள்ள பார்வை மாடங்களின் அருகே செல்ல பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. பல கோடி ரூபாய்களை கொட்டி செலவு செய்து குளங்கள் அழகு படுத்தப்பட்டு உள்ளன.
ஆனால் அவற்றை முறையாக பராமரிக் காததால், மீண்டும் குளங்கள் அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
பொழுதுபோக்கு மையம்
பாலகிருஷ்ணன், (கோவை) :-
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குளங்கள் அனைத்தும் அழகாக காட்சியளிக்கிறது. பொதுமக்களுக்கு சிறந்த பொழுபோக்கு மையமாகவும் திகழ்கிறது. இது பாராட்டக் கூடியது தான்.
பல கோடி ரூபாய் செலவு செய்து அழகுபடுத்தப் பட்ட குளக்கரைகளை முறையாக பராமரித்தால்தான் இந்த அழகு நீடிக்கும். இல்லை என்றால் மீண்டும் முன்புபோன்று மாறிவிடும். எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளங்களை நன்றாக பராமரிக்க வேண்டும்.
அன்பரசன் (வக்கீல், சாய்பாபாகாலனி கோவை) :-
வாலாங்குளத்தில் பார்வை மடத்தில் இருக்கை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்து விட்டன. குளக்கரையில் மின்விளக்குக ளும் முறையாக ஒளிருவது இல்லை. கரையை அழகுபடுத்தி விட்டனர். ஆனால் குளத்தில் தேங்கி நிற்பது கழிவுநீர் என்பதால், துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது.
கழிவுநீர் தேங்குவதை தடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதற்காக சுத்திகரிப்பு மையம் கட்டும் பணியை விரைவுபடுத்தி, எந்த குளத்திலும் கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். மேலும் அழகுபடுத்தப்பட்ட குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
முறையாக சீரமைக்க வேண்டும்
ஆறுமுகம் (வடவள்ளி) :- செல்வசிந்தாமணி குளத்தில் இன்னும் பணிகள் முடியாதால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
அதற்குள் அங்கு இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சேதமாகிவிட்டன. குறிப்பாக பார்வையாளர் மாடத்தில் உள்ள மரக்கட்டைகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. எனவே அதில் ஏறி நின்றால் கண்டிப்பாக விபத்துதான் ஏற்படும்.
எனவே இதுபோன்ற ஆபத்தான விஷயங்களை அதிகாரிகள் முறையாக கண்காணித்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
சண்முகநாதன்:- (கவுண்டம்பாளையம்) :-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தொடங்கும்போதே, அந்த பணிகளை செய்பவர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்கவில்லை.
இதனால் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டது.
இதனால் அங்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். முத்தண்ணன்குளத்தில் பணிகள் முடிக்கவில்லை. ஆனால் அதற்குள்ளேயே அங்கு பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்துவிட்டன.
அத்துடன் பகல் நேரத்தில் இங்கு காதலர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் செய்யும் செயலை பார்த்தால் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இதையும் கட்டுப்படுத்தும் கடமை அதிகாரிகளுக்கு இருக்கிறது.