பிளஸ்-2 மாணவியை வயல்காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பாலிடெக்னிக் மாணவர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலிடெக்னிக் மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தோப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் திவாகர் (18). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் 17 வயது நிரம்பிய பிளஸ்-2 மாணவியும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை, தோப்பூர் குளத்தின் அருகே உள்ள வயல்காட்டு பகுதிக்கு வருமாறு திவாகர் அழைத்தார். அந்த மாணவியும் அங்கே சென்றார். அப்போது, திவாகர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுபோல் மேலும் 2 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்தபோது, நடந்ததை கூறினார். பின்னர் மாணவியை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து திவாகரை வலைவீசி தேடி வருகின்றனர்.