பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது- 30-ந்தேதி சூரசம்ஹாரம்

பொள்ளாச்சியில் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

Update: 2022-10-25 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

கந்தசஷ்டி விழா தொடக்கம்

பொள்ளாச்சியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடக்கும். அதன்படி நேற்று விநாயகர் பூஜை, அனுக்ைஞ, வாஸ்து சாந்தியுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. முனனதாக சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சூரசம்ஹாரம்

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கந்த சஷ்டி உற்சவம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 29-ந்தேதி மாலை 6 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம், 30-ந் தேதி மாலை 4 மணி அளவில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடக்கிறது.

31-ந் தேதி காலை 10 மணிக்கு மகாபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம், 1-ந்தேதி மாலை 6 மணிக்கு திரு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

தங்கவேல் அய்யன் கோவில்

நெகமம் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தங்கவேல் அய்யன் கோலிலில் ஆண்டு தோறும் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து நேற்று காலை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து தங்கள் கைகளில் காப்புக்கட்டிக் கொண்டனர். 29-ந்தேதி சனிக்கிழமை இரவு வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வான 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நெகமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் இரவு முருகன் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.


வால்பாறை

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. இதையடுத்து உற்சவர் கோவிலில் திருவீதி உலா நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மூலவர் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) சிறப்பு அலங்கார வழிபாடு, மஹா தீபாராதனை நடைபெறுகிறது. கணபதி ஹோமம் உலக நலவேள்வி யாகம், மூலமந்திர மஹா யாகம் நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதி மலர் அர்ச்சனை வழிபாடு, எம்.ஜி.ஆர் நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி வேல் வாங்குதல் வழிபாடு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வால்பாறை புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சூரசம்ஹார பெருவிழா நடைபெறுகிறது. 31-ந் தேதி மதியம் 12 மணியளவில் சுப்பிரமணிய சுவாமிக்கு வள்ளி -தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்