அனந்தபத்மநாப நாடாரின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைதளபதியான அனந்தபத்மநாப நாடாரின் நினைவு தினத்தையொட்டி காட்டாத்துறையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-09-13 18:40 GMT

திருவட்டார்:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைதளபதியான அனந்தபத்மநாப நாடாரின் நினைவு தினத்தையொட்டி காட்டாத்துறையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினம்

மன்னர் ஆட்சிகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைதளபதியாகவும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆலோசகராகவும் இருந்தவர் அனந்தபத்மநாப நாடார். இவரது 272-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட தச்சன்விளையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க.சார்பில் அமைச்சர் மனோதங்கராஜின் மகன் ரிமோன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜாண்பிரைட் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து ெகாண்டனர்.

சிலம்பு விளையாட்டு

இதுபோல் நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சுரேந்திரகுமார், தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ், சாமிதோப்பு குருக்கள் பாலபிரஜாதிபதி அடிகளார், அனந்தபத்பநாப நாடாரின் கொள்ளுபேரன்கள் ராஜகோபால், விஜயவர்ம மகாராஜா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு களரி அமைப்புகள் சார்பில் அவரது நினைவிடத்தில் களரி, சிலம்பு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அனந்தபத்மநாப நாடாரின் கொள்ளு பேரனான விஜயவர்மா மகாராஜா கூறியதாவது:-

மணிமண்டபம் கட்ட வேண்டும்

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் தலைமை தளபதியாக வீற்றிருந்து குளச்சல் போரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அனந்தபத்மநாப நாடாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் அவரது நினைவிடத்திற்கு செல்லும் பாதையில் சாலை அமைத்து தரவேண்டும் என்றும் தமிழக அரசிற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போது எங்கள் குடும்பத்தினரின் முயற்சியால் இந்த பகுதி அழியாமல் பாதுகாத்து வருகிறோம். எனவே, தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்