துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

சிதம்பரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-18 18:50 GMT

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி சேந்திரக்கிள்ளை மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 28). இவர் கடலூரில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது சிதம்பரம் தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பெரியசாமியும், அவருடன் மஞ்சக்குழி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார் என்பவரும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதில் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தான் இருந்த அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது, அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெரியசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், கடலூர் மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அதில், பெரியசாமி பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால், தனது கழுத்து பகுதியில் சுட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்து பகுதியில் பாய்ந்த தோட்டா பின்பக்கமாக சீறிப் பாய்ந்து வெளியேறி அங்குள்ள சுவரின் மீது தாக்கியதில் சுவரும் சேதமாகி இருந்தது. இதையடுத்து, பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்து

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த மாதம்(ஜூன்) 10-ந்தேதி, பெரியசாமிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு சாலை விபத்து நேர்ந்தது. இதனால் அவருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தனது வீடு சிதம்பரம் அருகில் தான் உள்ளது. எனவே பாதுகாப்பு பணிக்கு வந்து செல்கிறேன், தனக்கு விடுமுறை தேவையில்லை என்று தெரிவித்து பணிக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது, அவர் யாரிடமோ செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும் அவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என்றும் தகவல் வந்துள்ளது. இருப்பினும் அதுபற்றி தீவிரமாக விசாரணை செய்த பிறகு தான், அவரது தற்கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என்று தெரிவித்தார்.

பரபரப்பு

சிதம்பரம் தனியார் பள்ளியில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் தேர்வு நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் பள்ளி வளாகத்தில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்