பா.ஜனதா ஆதரவு வீடியோக்கள் முகநூலில் பகிர்வு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

திண்டுக்கல் அருகே பா. ஜனதா ஆதரவு வீடியோக்களை முகநூலில் பகிர்ந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-05-31 13:04 GMT

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுரேஷ் (வயது 44). இவர் தனது முகநூல் பக்கத்தில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவான வீடியோக்களை பகிர்ந்து வந்ததாக புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஏட்டு சுரேசின் முகநூல் பக்கத்தை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவான வீடியோக்களை அவர் பகிர்ந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் துறையின் விதிகளை மீறியதாக ஏட்டு சுரேசை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும் ஏட்டு சுரேசுக்கு முகநூலில் நண்பர்களாக இருந்த சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் சி.கே.பாலாஜி உள்ளிட்டோர் இன்று உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு சுரேசை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவசேனா சார்பில் வருகிற 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்