போலீசார் வாகன சோதனையில் 1,650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் - சாக்குமூட்டையில் கடத்திய 2 பேர் கைது
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் 1,650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்குமூட்டைகளில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரவள்ளூர் பகுதியில் லோடு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பெரவள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெரவள்ளூர் லோகோ பிரிட்ஜ் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த லோடு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர்.
இதில் 50 சாக்கு மூட்டையில் 1,650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இதனை கடத்தி வந்த கொடுங்கையூர் எழில் நகர் 5-வது தெருவை சேர்ந்த செல்லப்பா (வயது 55), 13-வது தெருவை சேர்ந்த சசிகுமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்லப்பா மீது குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே 7 வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.