இறையூரில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.

Update: 2023-01-22 18:28 GMT

குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தினால் இறையூர் கிராமம் வேங்கைவயல் பகுதி தொடர்ந்து பரபரப்புக்குள்ளாகவே இருந்து வருகிறது. அசுத்தத்தை கலந்த மர்ம ஆசாமிகளை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தனிப்படையினர் முகாமிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் வேங்கைவயல் பகுதிக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வருகை, போராட்டம் காரணமாக பதற்றமாக இருந்து வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு

வேங்கைவயல் பகுதி மற்றும் இறையூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியின் அருகே இரும்பு தடுப்புகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரும் நபர்களிடம் தங்களது கோரிக்கைகளையும், தங்களது நிலைகளையும் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயத்தை தங்களை சந்திக்க வரும் நபர்களிடம் தெரிவிக்கின்றனர். அவர்களும் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க இறையூர், வேங்கைவயல பகுதியில் கண்காணிப்பு பணியை வெள்ளனூர், திருக்கோகர்ணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பகல் மற்றும் இரவில் போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.

விசாரணை தீவிரம்

இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட நபர்களை அழைத்து விசாரித்து அவர்களிடம் தகவல்களை கேட்டு பெறுகின்றனர். அப்பகுதியில் சிலரை அழைத்து நேற்றும் விசாரித்தனர். இந்த விசாரணையானது தொடர்ந்து தினமும் நடைபெறும் என்றும், இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அசுத்தம் செய்யப்பட்ட மாதிரியை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் வர தாமதமாகும் என கூறப்படுகிறது. அந்த முடிவுகள் வந்த பிறகு அதற்கேற்ப விசாரணை நடைபெறும் என போலீசார் கூறினர்.

குடிநீர் தொட்டியில் தடயங்களை சேகரிக்க முடியுமா?

இந்த விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், ''எங்களது விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை நன்கு சுத்தம் செய்து விட்டனர். இதனால் அதில் இருந்து தடயங்களை சேகரிக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். அதில் இருந்து தடயங்களை பெற வாய்ப்பு இல்லை'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்