திருச்சி அருகே 2 வீடுகள்-கடையில் போலீசார் திடீர் சோதனை

திருச்சி அருகே 2 வீடுகள்-கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2022-11-19 20:12 GMT

2 வீடுகளில் சோதனை

கோவையில் கடந்த மாதம் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டு, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் ஆவாரங்காடு கந்தசாமி நகரில் உள்ள சர்புதீன்(வயது 25), இனாம்குளத்தூர் நடுத்தெருவில் உள்ள சாகுல் ஹமீது(25) ஆகியோரின் வீடுகளில் ேநற்று ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

'ஹார்டு டிஸ்க்'கை கைப்பற்றினர்

இதில் அவர்களது வீடுகளில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு நிபுணர்கள் ஆகிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இனாம்குளத்தூர் கடைவீதியில் உள்ள சர்புதீனின் ஜெராக்ஸ் கடையுடன் கூடிய இணையதள சேவை மையத்திலும் போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் ஒரு 'ஹார்டு டிஸ்க்‌', ஒரு மடிக்கணினி, ஒரு 'பென் டிரைவ்', ஒரு செல்போன், ஒரு 'மெமரி சிப்' ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது.

கார் வெடிப்பு சம்பவம்...

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு சர்புதீன், சாகுல்ஹமீது ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முகநூல் பக்கத்தை 'லைக்' செய்திருந்ததாக கூறி, அவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். மேலும் அந்த அமைப்புடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக 2 பேரின் வீடுகள் மற்றும் கடையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. என்.ஐ.ஏ. கண்காணிப்பில் உள்ள 2 பேரின் வீடுகளில் நேற்று திடீரென போலீசார் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்