தஞ்சையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக்கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். நகைகள், ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.
தனியார் நகைக்கடை
தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன், பழைய நகைகளுக்கு புதிய நகைகள் மாற்றித்தரும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ஒரத்தநாடு நகைக்கடையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர். அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, ஊழியர்கள் எடுத்துக்கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூட்டி சீல் வைப்பு
இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 4 இடங்களிலும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக்கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்அடிப்படையில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள நகைக்கடைக்கு வந்தனர். பின்னர் கடையில் பூட்டியிருந்த சீலை அகற்றி விட்டு பூட்டை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
நகைகள் உள்ளதா?
கடையில் நகைகள் உள்ளதா? ஏதாவது ஆவணங்கள் உள்ளதா? எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை 2 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின் போது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து மற்ற கடைகளிலும் சோதனை நடத்துவார்கள் என தெரிகிறது.