திண்டுக்கல்லில் 25 வாகனங்களுக்கு போலீசார் பூட்டு

திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 25 வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.

Update: 2022-05-20 17:22 GMT

திண்டுக்கல் நகரில் முக்கிய சாலைகளில் கார், வேன், சரக்கு வாகனங்களை போக்குவரத்து விதியை மீறி கண்டபடி நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு, அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் போக்குவரத்து இன்ஸ்பெகடர் சேரலாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் நகர் முழுவதும் சோதனை நடத்தினர்.

அப்போது திண்டுக்கல் மெயின்ரோடு, சாலைரோடு, கடைவீதி, ரதவீதிகள், பழனி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள், சரக்கு வாகனங்கள், மினிவேன்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து அவ்வாறு நிறுத்தப்பட்டு இருந்த 25 வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.

இதனால் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று திரும்பிய உரிமையாளர்கள், வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் தவித்தனர். அதன்பின்னர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அடுத்தமுறை அதேபோல் நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்