போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்து; சப்-இன்ஸ்பெக்டர் காயம்

பண்ருட்டி அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.

Update: 2023-08-02 19:30 GMT

பண்ருட்டி, 

ஜீப் கவிழ்ந்தது

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபிரியா. இவர் நேற்று சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் என்.எல்.சி. நில எடுப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் மாலையில் போலீஸ் ஜீப்பில் பண்ருட்டிக்கு புறப்பட்டார். ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஓட்டினார்.

இரவு 8.15 மணியளவில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு அருகே உள்ள வளைவில் திரும்பியபோது சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி காயமடைந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா காயமின்றி உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய போலீஸ் ஜீப்பை மீட்டனர். பின்னர் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்