செயலி மூலமாக கடன் கேட்டு விண்ணப்பித்த பா.ஜனதா பிரமுகருக்கு ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்
செயலி மூலமாக கடன் கேட்டு விண்ணப்பித்த பா.ஜனதா பிரமுகருக்கு ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செயலி மூலமாக கடன் கேட்டு விண்ணப்பித்த பா.ஜனதா பிரமுகருக்கு ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா பிரமுகர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரியாசுதீன்(வயது 32). மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா சிறுபான்மை அணி பொதுச்செயலாளராக உள்ள இவர், கடன் செயலி மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு கடன் கிடைக்காத நிலையில் அவருடைய செல்போனுக்கு சம்பந்தப்பட்ட கடன் செயலி நிறுவனத்திடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், முகமது ரியாசுதீனிடம், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துங்கள் என்று கேட்டுள்ளார்.
நிர்வாண படங்கள்
அதற்கு பதில் அளித்த முகமது ரியாசுதீன், நான் கடனே வாங்காத நிலையில் எவ்வாறு அதை திரும்ப செலுத்துவது என கேட்டு பணம் செலுத்த முடியாது என கூறி உள்ளார்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கடன் செயலி நிறுவனத்தில் இருந்து முகமது ரியாசுதீன் படத்தை நிர்வாணமாக இருப்பது போல 'மார்பிங்' செய்து அவருடைய வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
மிரட்டல்
தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் முகமது ரியாசுதீனை தொடர்பு கொண்டு, 'உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும், இல்லை என்றால் உங்களது நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம். மேலும் உங்கள் செல்போனில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்புவோம்' என கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போதும் முகமது ரியாசுதீன் பணம் கொடுக்காததால், அவர் செல்போனில் இருந்த எண்கள் அனைத்துக்கும் 'மார்பிங்' செய்யப்பட்ட முகமது ரியாசுதீனின் நிர்வாண படங்களை அனுப்பி உள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ரியாசுதீன் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் புகார் அளித்தார். அதேபோல் சீர்காழி போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
செயலி மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்த பா.ஜனதா பிரமுகருக்கு மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்கள் அனுப்பப்பட்ட விவகாரம் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.