தலை துண்டித்து வாலிபர் கொலை: கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை-போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

Update: 2022-11-05 18:45 GMT

ஓசூர்:

பாகலூர் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

வாலிபர் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர் உடலை மீட்டு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், வாலிபர் வேறு இடத்தில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், மரம் அறுக்கும் எந்திரத்தால் கை, கால்களை வெட்டி துண்டாக்கி விட்டு, நிர்வாண நிலையில் சென்னசந்திரம் ஏரியில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்தது.

3 தனிப்படைகள் அமைப்பு

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் வாலிபரை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்தவர் களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில், பாகலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஓசூர் அட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் தளி சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல்?

மேலும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். நிர்வாண நிலையில் உடல் வீசப்பட்டதால் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்