'யூ டியூப்'பை பார்த்து துப்பாக்கி தயாரித்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

‘யூ டியூப்’பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-06-01 21:01 GMT

ஓமலூர், 

துப்பாக்கிகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் கடந்த மாதம் 20-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 2 பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் இரண்டு கைத்துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் முகமூடி, பெட்ரோல் இருப்பது தெரியவந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

வாடகை வீடு

விசாரணையில் அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சஞ்சய் பிரகாஷ் (வயது 25). சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து மகன் நவீன் சக்கரவர்த்தி (25) என்பது தெரியவந்தது. இவர்களில் சஞ்சய் பிரகாஷ் என்ஜினீயர் ஆவார். நவீன் சக்கரவர்த்தி பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் நண்பர்கள் என்பதும், கடந்த 6 மாதமாக ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.

'யூ டியூப்'பை பார்த்து தயாரிப்பு

அவர்கள் 'யூ டியூப்'பை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக தெரிவித்தனர். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டும், இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துப்பாக்கி தயாரித்ததாகவும், ஏதாவது ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என திட்டம் தீட்டியதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓமலூர் போலீசார் முடிவு செய்து கோர்ட்டில் 2 நாட்கள் அனுமதி பெற்றனர்.

போலீசார் விசாரணை

அதன்படி சேலம் மத்திய சிறையில் இருந்து விசாரணைக்காக ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கூறியதற்கு மாறாக, தற்போது வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் சஞ்சய் பிரகாஷ் தான் என்ஜினீயர் என்பதால் நண்பருடன் சேர்ந்து துப்பாக்கியை தயாரித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்