மரத்தாலான காளி உருவத்துக்கு தீ வைப்பு
மரத்தாலான காளி உருவத்துக்கு தீ வைக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள வடக்கு மூலங்குடி கிராம எல்லையில் சுந்தர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு காளியம்மன் திருநடன வீதி உலா தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த மரத்தினால் செய்யப்பட்ட பீரோவில் வைக்கப்பட்டிருந்த காளியின் உருவம் தீயில் எரிந்து போனது. இதுகுறித்து அதனை செய்து வைத்திருந்த முருகானந்தம் என்பவர் திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார். இவர் மீண்டும் தனது சொந்த செலவில் இரும்பு பீரோ செய்து அதனுள் மீண்டும் ஒரு காளி உருவத்தை மரத்தால் செய்து வைத்திருந்தார். நேற்று காலை அவர் கோவிலுக்கு வந்தபோது காளி உருவம் தீ வைத்து எரிக்கப்பட்டு கருகி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.