போலீஸ் டி.ஐ.ஜி. திடீர் தற்கொலை

தலையில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் டி.ஐ.ஜி. திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-07 19:45 GMT

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார்.


நடை பயிற்சி


இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரது அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கிறது. முகாம் அலுவலகம் (வீடு) ரெட்பீல்டு பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் தான் டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மனைவி கீதாவாணி (42), மகள் நந்திதா (18) ஆகியோருடன் தங்கி இருந்தார்.


கோவை சரகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில், மிகவும் திறம்பட பணியாற்றி வந்த டி.ஐ.ஜி., தினமும் காலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வது உண்டு. அவர், நடைபயிற்சியை முடித்ததும் முகாம் அலுவலக வளாகத்திலேயே பூப்பந்து விளையாடுவது வழக்கம்.


அதன்படி நேற்று காலை 6.50 மணிக்கு நடைபயிற்சி செல்வதற்காக புறப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருடைய பாதுகாவலர் ரவிச்சந்திரனும் அங்கு வந்தார். வீட்டை விட்டு வெளியே வந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் அங்குள்ள வராண்டாவில் பரபரப்புடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார்.


துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பின்னர் அவர் திடீரென்று தனது பாதுகாவலரிடம் இருந்து கைத்துப்பாக்கியை (ஏர் பிஸ்டல்) கொடு என்று கேட்டு உள்ளார். உயர் அதிகாரி துப்பாக்கியை கேட்டதால், பாதுகாவலரும் எந்த கேள்வியும் எழுப்பாமல் தன்னிடம் இருந்த துப்பாக்கியை டி.ஐ.ஜி. விஜயகுமாரிடம் கொடுத்தார்.


துப்பாக்கியை வாங்கியதும் வீட்டின் முன்பகுதியில் உள்ள போர்ட்டிக்கோ பகுதிக்கு விஜயகுமார் வேகமாக சென்றார். பின்னர் அந்த வேகத்தில் தனது தலையின் வலது புறம் துப்பாக்கி யை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் வலது புறத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு இடதுபுறம் வழியாக வெளியே வந்தது.


உயர் அதிகாரிகளுக்கு தகவல்


இதனால் டி.ஐ.ஜி. விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் பாதுகாவலர் ரவிச்சந்திரன் போர்ட்டிக்கோ பகுதிக்கு ஓடிச்சென்றார். அதுபோல் வீட்டிற்குள் அறையில் இருந்த டி.ஐ.ஜி.யின் மனைவியும் வெளியே வந்தார்.


அங்கு விஜயகுமார், கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய கையில் கைத்துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


பாதுகாவலரிடம் விசாரணை


அதன்பேரில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ் ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் டி.ஐ.ஜி.யின் பாதுகாவலர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள்.


இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.


வீடியோ பதிவு


இதைத்தொடர்ந்து விஜயகுமாரின் உறவினர்களும் விரைந்து வந்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன் முன்னி லையில் டாக்டர் பாலா தலைமையில் 4 டாக்டர்கள் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.


இதற்கிடையே தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் கோவை வந்தார். அவர், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாகவும் அவர் விசாரணை நடத்தினார்.


மலர் வளையம் வைத்து அஞ்சலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விஜயகுமாரின் உடலுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், கூடுதல் டி.ஜி.பி. அருண், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.


அதன்பிறகு அவருடைய உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மனைவி, மகளிடம் விசாரணை


இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கீதாவாணி, மகளை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி னர். இந்த விசாரணை சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.


முதற்கட்ட விசாரணையில், போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் மனஅழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான தகவல் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்