அரசு அனுமதி வழங்கிய பின்னர் இரவு நேர கடைகளை மூட போலீசார் நிர்பந்திக்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்த பின்னர் இரவு நேர கடைகளை மூட போலீசார் நிர்பந்திக்க முடியாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-19 10:29 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில் கோவை-சேலம் பைபாஸ் சாலையில் பேக்கிரி கடை வைத்துள்ளேன். இரவு நேரங்களில் எங்கள் வியாபார நடவடிக்கையில் போலீசார் தலையிடுகின்றனர். இரவு நேரங்களில் கடைகளை திறக்கக்கூடாது என்றும் மூடும்படியும் உத்தரவிடுகின்றனர்.

ஆனால், தொழிலாளர் நலத்துறை 24 மணி நேரமும் அனைத்து கடைகளும் செயல்படலாம் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி இரவு நேரக்கடை நடத்த அனுமதி கேட்டு கடந்த ஜூன் 9-ந்தேதி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, சங்ககிரி இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் கடைகளில் வியாபாரம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்த பிறகு, கடைகளை இரவு நேரத்தில் மூட வேண்டும் என்று போலீசார் வியாபாரிகளை நிர்பந்திக்க முடியாது.

எனவே, மனுதாரர் கடை வியாபாரத்தில் போலீசார் தலையிடக்கூடாது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதாவது ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்