கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு: கண்காணிப்பு வளையத்துக்குள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள்- ஈரோட்டில் போலீசார் தீவிர ரோந்துப்பணி

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து ஈரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் வீடுகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

Update: 2022-10-25 20:41 GMT

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து ஈரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் வீடுகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

கார் சிலிண்டர் வெடிப்பு

கோவை டவுன்ஹால் அருகே கோட்டை மேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி அதிகாலை கோவில் முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின்(வயமு29) என்பவர் உடல் கருகி பலியானர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரிய வ்நதது.

கோவையில் பெரிய அளவிலான தாக்குதலுக்கு திட்டமிட்டு சதி செயல்கள் அரங்கேற்றும் கும்பல் மூலம் இந்த கார் சிலிண்டர் விபத்து அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்காணிப்பில் பிரமுகர் வீடுகள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஆனந்தகுமார் தலைமையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் டவுன் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், ஈரோட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர்களின் நடமாட்டம், கார்கள், மோட்டார் சைக்கிள்களின் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்று போலீஸ்அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்