வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றவேண்டும்; முதல்-அமைச்சரிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே இயற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தினார்.

Update: 2023-10-09 19:06 GMT

10.5 சதவீத இடஒதுக்கீடு

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தாலும், சரியான தரவுகளை வைத்து இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அந்த தீர்ப்பு வெளிவந்து ஒன்றரை ஆண்டு ஆகிறது. அதன்பிறகு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தமிழக அரசு புதிதாக உருவாக்கி, இடஒதுக்கீடு தொடர்பான அதன் பரிந்துரைகளை கேட்டுள்ளது. இந்த ஆணையத்திற்கு 3 மாதங்கள், 6 மாதங்கள் என கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சந்தேகம்

ஆனால் 9 மாதங்கள் ஆகியும் அரசுக்கு அந்த ஆணையம் பரிந்துரைகளை வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தரவுகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை புதிதாக உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. தரவுகளை சேகரிக்க வேண்டும் என்றாலும் அதிகபட்சம் 15 நாட்கள்தான் ஆகும். ஆனால் இன்னும் தரவுகள் வரவில்லை என்று கூறுவதை எங்களால் ஏற்க முடியவில்லை.

10.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அரசு கொண்டு வருமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவேதான் இந்த கூட்டத்தொடரிலேயே 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளோம். அதுபற்றி பேசி முடிவெடுப்போம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். தரவுகளை இன்னும் சேகரித்து வருவதாக உடனிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தரவுகளை வாங்கி அதை பரிந்துரையாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொடுத்தால்தான் சட்டம் இயற்ற முடியும்.

எண்ணம் உள்ளதா?

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வன்னியர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை சாதி ரீதியாக பார்க்கக் கூடாது. தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினையாக பார்க்க வேண்டும். சமூகநீதி பிரச்சினை இது. தமிழகத்தில் வன்னியர் சமுதாயம், 20 வடமாவட்டங்களில் வசிக்கும் தனிப்பெரும் சமுதாயமாகும். இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்.

கடந்த 30 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் கடைசி 15 இடங்களில் இந்த வடமாவட்டங்கள் இருக்கின்றன. அதிக குடிசைகள், மது விற்பனை போன்றவை உள்ள மாவட்டங்களும் இவைதான். சுப்ரீம் கோர்ட்டு கூறிய சில குறைபாடுகளை நீக்கிவிட்டு இதற்கான சட்டத்தை அரசு கொண்டுவரலாம். அதற்கு தடையில்லை. கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருந்தால் அதை கொண்டு வந்திருப்பார்கள். அப்படிப்பட்ட எண்ணம் முதல்-அமைச்சருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வியாக உள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1980-ம் ஆண்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். பீகாரில் 13 கோடி மக்கள் தொகையில் சாதிவாரி கணக்கெடுப்பை 45 நாட்களில் ரூ.500 கோடி செலவில் முடித்துள்ளனர். தமிழகத்தில் 7.80 கோடி மக்கள் தொகைதான் உள்ளது.

கர்நாடகா, ஒடிசாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ராஜஸ்தானில் நடக்க உள்ளது. சமூகநீதி பேசும் தி.மு.க. அரசும் இதை நடத்த வேண்டும். சமூகநீதியை பேசினால் மட்டும் போதாது, செயல்படுத்தவும் வேண்டும்.

காவிரி பிரச்சினை

குடிநீர், வாழ்வாதாரம், விவசாயம் ஆகியவை காவிரி பிரச்சினையில் அடங்கியுள்ளன. அதில் நிரந்தர தீர்வு வேண்டும். தமிழகத்தின் மேட்டூர் அணை உள்பட கர்நாடகாவில் காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி ஆணையம் என்று யார் சொன்னாலும், கர்நாடக அரசு கேட்பதில்லை. எனவே அணைகளை அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இந்த பிரச்சினையில் சட்டசபையில் தீர்மானம் போட்டால் மட்டும் போதாது. சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக அதை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்