பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம்: பல்லடத்தில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்பு

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் அமைக்கப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2024-02-22 23:13 GMT

கோப்புப்படம் 

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு 27-ந்தேதி மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது.

பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.

பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.

பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இதன்பின்பு பிரதமர் மோடி 3.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார்.

அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.

இதன்பின்பு, பிரதமர் மோடி 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். பின்னர் இரவு அதே ஓட்டலில் தங்குகிறார்.

மறுநாள் 28-ந்தேதி காலை 8.15 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு மோடி செல்கிறார். 8.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 9 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் விழாவில் பங்கேற்று சில திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த பணிகளை தொடங்கி வைக்கிறார்.

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார். நெல்லையில் பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.

பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்