பெரியகுளத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால், பெரியகுளத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-08 19:00 GMT

பிளஸ்-2 தேர்வில் தோல்வி

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன். கூலித்தொழிலாளி. இவரது மகள் சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா (வயது 17). இவர் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவர் பிளஸ்-2 தேர்வை எழுதியிருந்தார்.

நேற்று காலை தேர்வு முடிவுகளை செல்போன் மூலம் பார்த்த சுபஸ்ரீ மகா பிரத்திநிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் பெரியகருப்பன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மாணவியின் சித்தி பஞ்சவர்ணம் வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்