விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காத நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான பிளஸ்-2 விடைக்குறிப்புகள் - கல்வித்துறை அதிர்ச்சி
விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காத நிலையில் சமூக வலைதளங்களில் பிளஸ்-2 விடைக்குறிப்புகள் வெளியான சம்பவம் கல்வித்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.;
சென்னை,
பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 10-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான அனைத்து பணிகளையும் தேர்வுத்துறை செய்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 79 மையங்களில், சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிகளில் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் திருத்தும் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ('கீ ஆன்சர்') வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை வழங்குவார்கள்.
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதற்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படக் கூடிய விடைக்குறிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. விலங்கியல், தாவரவியல் உள்பட சில பாடத் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகி, கல்வித் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்வித் துறை உடனடியாக விடைக்குறிப்புகள் வெளியானது எப்படி?, அதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து அந்த விடைக்குறிப்புகள் சமூக வலைதளங்களில் உலாவியது எப்படி? என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க அரசுத் தேர்வுத்துறைக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.