எர்ணாவூரில் ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி - மற்றொருவர் மாயம்
எர்ணாவூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலியானார். மாயமான மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னை எர்ணாவூரில் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர் நேற்று முன்தினம் மாலை எர்ணாவூர் கடலில் குளிக்க சென்றனர். அனைவரும் கடலில் விளையாடியபடி குளித்தனர்.
அப்போது பிளஸ்-1 மாணவரான கோபிநாத்(வயது 17), 8-ம் வகுப்பு மாணவரான லோகேஸ்வரன்(13) ஆகிய 2 பேரும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 3 பேரும் கூச்சலிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான 2 மாணவர்களையும் தேடினர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கோபிநாத் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார், கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான மற்றொரு மாணவரான லோகேஸ்வரனை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.