அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி

அமைச்சர் பொன்முடி உத்தரவின்பேரில் அரகண்டநல்லூர் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.

Update: 2023-06-13 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் மேடும், பள்ளமாக உள்ள மைதானத்தை சீரமைக்கவேண்டும் எனவும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கவேண்டும், இரவு நேரத்தில் மின்விளக்கு, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அமைச்சர் பொன்முடி, அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்புவை நேரில் வரவழைத்து, விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேவையான உபகரணங்களையும் ஏற்பாடு செய்து தரும்படி கூறினார்.

அதன் அடிப்படையில் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி தொடங்கி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் பொன்முடிக்கும், பேரூராட்சி மன்ற தலைவருக்கும் அப்பகுதி மக்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்