சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Update: 2022-08-16 14:11 GMT

கூடலூர், 

முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டம்ளர், இலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், வெளிமாநில மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சீசன் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சீசன் நாட்களில் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அலுவலர்கள், வனத்துறையினர் வாகன சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

பாட்டில்கள் பறிமுதல்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் நுழையும் போது வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தடுப்பதற்காக கூடலூர் தொரப்பள்ளி, மசினகுடி உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் ஏராளமானவற்றை பறிமுதல் செய்தனர்.

இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்