கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்;
தஞ்சையில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கழிவுநீர் கால்வாய்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் அண்ணாமலை நகர் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து கல்லணைக்கால்வாய் பகுதிக்கு செல்லும்படி கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த கால்வாய் தற்போது முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேறி செல்லாமல் தேங்கி கிடக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகள்
இதனால் கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாய் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கால்வாயை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.