நெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-26 20:11 GMT


பிளக்ஸ்-பேனர்கள்

நெல்லையை சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக விளம்பர பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டு உள்ளன. இவை பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன. ஏற்கனவே இதுபோல சாலையோரங்களில் வைத்த பிளக்ஸ் போர்டுகளால் விபத்துகள் நடந்து, இளம்பெண் உள்பட பலர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், நெல்லையில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்றுவது குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நெல்லை நகரில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தனபால் ஆகியோர் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது.

உடனே அகற்ற வேண்டும்

அப்போது நீதிபதிகள் நெல்லை மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டு இருக்கும் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றி, அது குறித்த தகவலை பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி வழக்கு மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

75 சதவீதம் அகற்றம்

அப்போது அரசு வக்கீல் அந்தோணி பிரபாகர் ஆஜராகி, நெல்லை மாநகரில் உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 75 சதவீத பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன. தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தார். இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக மனுதாரர் தரப்பு வக்கீலிடமும் உறுதி செய்து கொண்டு, வழக்கை  முடித்துவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்