மின்கம்பங்களையொட்டி நடப்பட்டஇரும்பு குழாய்களால் விபத்து அபாயம்
மின்கம்பங்களையொட்டி நடப்பட்ட இரும்பு குழாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடுகளில் ஸ்மார்ட் டி.வி. பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் ஐ.டி. துறையைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் அதிவேக இணையதள வசதி தேவை அதிகரிப்பால் தனியார் இண்டர்நெட் சேவை நிறுவனம் சார்பில், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் தனியார் இண்டர்நெட் சேவை நிறுவனம் சார்பில், அதிவேக இணையதள வசதிக்காக, பைபர் கேபிள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்பு குழாய்களை சாலையோரத்தில் பள்ளம் ேதாண்டி நட்டுள்ளனர். இந்த இரும்பு குழாய்கள் பெரும்பாலும் மின் கம்பங்களையொட்டியே நடப்பட்டுள்ளது.
இதனால் மின்கம்பங்களில் இருந்து நேரடியாக இரும்பு குழாய்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை ஒட்டி நடப்பட்டுள்ள இரும்பு குழாய்கள் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? என மின்வாரிய துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின் கம்பங்களை ஒட்டி இரும்பு குழாய்கள் நடுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.