தமிழகம் முழுவதும் தேயிலைத்தூள் விற்பனை செய்ய திட்டம்

கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

Update: 2022-06-17 15:15 GMT

குன்னூர், 

கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் குன்னூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் குன்னூரில் இன்கோசர்வ் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் தேயிலைத்தூள் உற்பத்தி செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பச்சை தேயிலையை தேயிலைத்தூளாக உற்பத்தி செய்வது, அதனை பேக்கிங் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் சிறு தேயிலை விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விற்பனை செய்ய திட்டம்

கூட்டத்தில் விவசாயிகள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.2 மானியம் வழங்கப்பட்டது. இதேபோல் தற்போது மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதனை ஏற்ற அமைச்சர் அன்பரசன், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது:-

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளுக்கு உரிய விலை கிடைக்க, விவசாயிகள் தரமான பச்சை தேயிலையை வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் தரமானதாக உள்ளது. ரேஷன் கடைகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தேயிலைத்தூள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்