விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை அகற்றம்
ஆக்கிரமிப்பை அகற்றி விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட கறியாக்கூடல் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அரசுக்கு சொந்தமான இடத்தை விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய்த்துறையினருக்கு பேரூராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் இங்கு யாரும் விவசாயம் செய்யக்கூடாது. இது, அரசுக்கு சொந்தமான இடம், என எச்சரிக்ைக பலகை வைத்தனர். ஆனால், நேற்று அந்த எச்சரிக்ைக பலகையை விவசாயிகள் அகற்றி விட்டு விவசாயம் செய்ய தண்ணீர் பாய்ச்சி உள்ளனர்.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட நெமிலி பேரூராட்சி நிர்வாகம் நேற்று எச்சரிக்கை பலகையை அகற்றிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளது.